100 ஆண்டு பழமையான 'வீராசாமி' உணவகம் ; லண்டனில் குவியும் ஆதரவு
'லண்டனில், 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், 'வீராசாமி' என்ற இந்திய உணவகத்தை மூடும் நிலைக்கு தள்ளக்கூடாது' என, பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர்கள் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனின் மையப்பகுதியில் உள்ள ரீஜென்ட் ஸ்ட்ரீட்டில், 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, 'வீராசாமி' உணவகம்.

வீராசாமி உணவகம்
இது, இந்தியா -- பிரிட்டன் இடையிலான உணவு கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக, 100 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ராணி இரண்டாம் எலிசபெத், மஹாத்மா காந்தி, நேரு, இந்திரா, சார்லி சாப்ளின் என ஏராளமான பிரபலங்கள் வீராசாமி உணவகத்தில் உணவருந்தியுள்ளனர்.
இந்நிலையில், வீராசாமி உணவகம் அமைந்துள்ள விக்டரி ஹவுஸ் கட்டடத்தை நிர்வகிக்கும், பிரிட்டன் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான கிரவுன் எஸ்டேட் நிறுவனம், உணவகத்தின் குத்தகையை நீட்டிக்க மறுத்துள்ளது.
இதனால் வீராசாமி உணவகத்தை இடமாற்றம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு, பிரிட்டனின் புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.