மொன்ரியாலில் வார இறுதியில் பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் நிறுத்தம்
மொன்ரியால் நகர மக்கள் இந்த வார இறுதியில் பொதுப் போக்குவரத்து இல்லாமல் இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
மொன்ரியால் போக்குவரத்து நிறுவனம் (STM) சாரதிகள் சங்கத்துக்கு 48 மணிநேர வேலைநிறுத்தம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நிர்வாக தொழிலாளர் தீர்ப்பாயம் (Administrative Labour Tribunal) அறிவித்தது.
இதன்படி, சங்கத்துக்கும் நிறுவனத்துக்கும் இடையே உடன்பாடு ஏற்படாவிட்டால், நவம்பர் 15 ஆம் திகதி காலை 4 மணி முதல் நவம்பர் 17 ஆம் திகதி காலை 3.59 மணி வரை பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் முழுமையாக நிறுத்தப்படும்.

இதற்கு முன், சங்கம் அக்டோபர் 31 அன்று ஒருநாள் வேலைநிறுத்தம் நடத்தி STM சேவையை முடக்கியது.
அதேவேளை, பராமரிப்பு தொழிலாளர்களின் சங்கம் முன்னதாக நவம்பர் 1 முதல் 28 வரை வேலைநிறுத்தம் அறிவித்திருந்தாலும், புதன்கிழமை காலை 6 மணியிலிருந்து சேவை மெதுவாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது, வியாழக்கிழமை முழுமையான சேவையாக மாறும் என தெரிவிக்கப்பட்டது.
தீர்ப்பாயம் வெளியிட்ட அறிக்கையில், மொன்ரியால்–ட்ரூடோ விமானநிலையம், மொன்ரியால் பொது சுகாதாரம் உள்ளிட்ட பல தரப்புகளின் கருத்துகளை பரிசீலித்ததாகவும், ஆனால் இரண்டு நாட்கள் சேவை நிறுத்தம் மக்களின் உயிர், சுகாதாரம், பாதுகாப்புக்கு நேரடி அபாயமில்லை எனவும் கூறியுள்ளது.