செக்கச் சிவந்த வானம் ;அரிய நிகழ்வைக் கண்டுகளித்த மக்கள்
பொதுவாகத் துருவப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய இயற்கை நிகழ்வான 'அரோரா போரியாலிஸ்'(Aurora Borealis), இத்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கில் உள்ள மேட்டர்ஹார்ன் மலைப்பகுதியில் சிவப்பு வண்ணத்தில் காட்சியளித்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பூமியின் காந்தப்புலம் மற்றும் சூரியனில் இருந்து வரும் மின்னூட்டப்பட்ட துகள்களின் இடைவினையால் ஏற்படும் இந்த 'அரோரா' நிகழ்வானது, இரவு வானை ஒளிக்கதிர்களால் அலங்கரிக்கும் ஒரு அற்புதமாகும்.

அரோரா போரியாலிஸ்
வடதுருவத்தில் இது 'அரோரா போரியாலிஸ்' எனவும், தென் துருவத்தில் இது 'அரோரா ஆஸ்ட்ராலிஸ்' எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின்போது வானத்தில் வண்ணத் திரைச்சீலைகளால் அலங்கரித்தது போல, ஒளிக்கதிர்கள் சுருள் வடிவத்திலோ அல்லது மினுமினுக்கும் வடிவங்களிலோ தோன்றும். இவை சிவப்பு, பச்சை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் காட்சியளிக்கும்.
இந்த 'அரோரா போரியாலிஸ்' நிகழ்வை நோர்வே, சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, கனடா மற்றும் அலஸ்கா போன்ற நாடுகளில் அதிகம் காண முடியும். சில நேரங்களில் வட அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் உயரமான பகுதிகளிலும் இது தென்படுவதுண்டு.
இந்த நிலையில், தற்போது இத்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
வானம் முழுவதுமாக செக்கச் சிவந்த வண்ணத்தில் காட்சியளித்த இந்த அரிதான காட்சியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் கண்டுகளித்ததாக சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுவீடன் மக்கள் இதை நல்ல செய்தியின் அடையாளமாகப் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.