தெற்கு சூடான் கிளர்ச்சியாளர்கள் மோதலில் 23 பேர் பலி ; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
தெற்கு சூடானில் அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்நாட்டில் எதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்நாட்டுப் பதற்றம் அதிகரித்துள்ளது.
அதிபர் சல்வா கீரின் அரச படைகளுக்கும், கைது செய்யப்பட்ட முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சாரின் ஆதரவுப் படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன், பழங்குடியினக் குழுக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் நீடித்து வருகின்றன.
ருவெங் நகருக்குள் ரீக் மச்சாரின் ஆதரவுப் படைகளைச் சேர்ந்த போராளிகள் நுழைந்ததைத் தொடர்ந்து மோதல்கள் வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் கடந்த வார வியாழக்கிழமை வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மோதல்கள் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.