ரஷ்ய துருப்புக்களின் ஏவுகணையால் 300 உக்ரைன் வீரர்கள் பலி
ரஷ்ய துருப்புக்களின் ஏவுகணையால் 300 உக்ரைன் வீரர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடங்கிய போர் 5 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற கடும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் ரஷ்ய துருப்புக்கள் அங்குள்ள நகரங்கள் மீது தொடர்ந்து ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

கிழக்கு உக்ரைன் டொனட்ஸ்க் மாகாணம் கிராமடோர்ஸ்கி நகரில் உள்ள ஒரு பாடசாலையில், உக்ரைன் இராணுவ வீரர்கள் தங்கி இருந்த நிலையில் பாடசாலை மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 300 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதை உக்ரைன் உறுதிப்படுத்திய வேளையில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தது. 300 வீரர்கள் பலியானதாக ரஷ்ய இராணுவம் கூறியதற்கு உக்ரைன் தரப்பு விளக்கம் அளிக்கவில்லை.

இதற்கிடையே உக்ரைனின் 2 ஆவது பெரிய நகரமான கார்கிவ்வில் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் பலியானதுடன் 23 பேர் படுகாயம் அடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மேலும் ஆயுத உதவிகளை வழங்குகின்றன. உக்ரைன் இராணுவத்துக்கு ஏவுகணைகள், டிரோன் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை அமெரிக்கா வழங்க உள்ளநிலையில் உக்ரைனுக்கு மேலும் 100 டிரோன்களையும், பீரங்கி தடுப்பு ஆயுதங்களையும் இங்கிலாந்து அனுப்பி வைத்துள்ளது.