அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்தியர்கள் நால்வர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் குடும்ப பிரச்சினை காரணமாக இந்திய பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அட்லாண்டா புறநகர்ப் பகுதியான லாரன்ஸ்வில்லி (Lawrenceville) நகரில் வசித்து வரும் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியினர்
சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக 51 வயதான இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2:30 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது அங்கிருந்த மூன்று குழந்தைகள் அச்சத்தில் அலுமாரியில் (Closet) ஒளிந்துகொண்டனர்.
அதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பிள்ளைகளில் ஒருவர் அதிர்ச்சியடைந்து அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் வழங்கியுள்ளார்.

தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது நான்கு பேர் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் உடலமாக மீட்கப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த பிள்ளைகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
தற்போது அவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர் மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொடுமையான தாக்குதல், சிறுவர்களை துன்புறுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .
இதேவேளை இந்தத் துயரச் சம்பவம் குறித்து அட்லாண்டாவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இரகல் தெரிவித்துள்ளது.