குவைத்தில் உயிரிழந்த 45 பேரின் சடலங்களும் இந்தியாவுக்கு அனுப்பிவைப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் சடலங்களும், இன்று(14) காலை இந்தியாவின் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சடலங்கள் இராணுவ விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்தம 8 ஆம் திகதி குவைத்தின் மெங்காஃப் (Mangaf) பகுதியில், 196 பேர் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பொன்றில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டது. இதில் 49 பேர் உயிரிழந்தனர்.
ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் உயிரிழப்பு
ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய புலம்பெயர்ந்தோர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பொன்றிலேயே, இந்த தீ விபத்து பதிவானது. இந்த தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன்படி கேரளத்தை சேர்ந்த 23 தொழிலாளர்களின் உடல்களும், தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்களும், கர்நாடகத்தை சேர்ந்த ஒருவரின் உடலும் என 45 பேரின் உடல்கள் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது, கொச்சி விமான நிலையத்திற்கு வருகைதந்த, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி, கேரள அமைச்சர்கள், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு அஞ்சலி செலுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து, கொச்சி விமான நிலையத்திலிருந்து உயிரிழந்தவர்களின் சொந்த ஊர்களுக்கு சடலங்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய மத்திய வெளியுறவு இணையமைச்சா் கீா்த்திவா்தன் சிங் தலைமையிலான குழு நேற்று(13) குவைத்திற்கு சென்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது