கனடாவிற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கனடாவிற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
எவ்வாறு எனினும் கோவிட் 19 பெருந்தொற்று காலப்பகுதிக்கு முன்னர் கனடாவிற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கையின் அளவை விடவும் குறைவான எண்ணிக்கையே இது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் கனடாவில் வதியாத 3.6 மில்லியன் பேர் வருகை தந்துள்ளனர்.
இது கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 6.3 வீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
பெருந்தொற்றுக்கு முன்னரான கோடை காலப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் கனடாவிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்கா தவிர்ந்த வேறும் நாட்டு பிரஜைகளின் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
எவ்வாறெனினும், கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 259,000 பேர் அதிக அளவில் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிற்கு விஜயம் செய்யும் ஏனைய நாட்டுப் பிரஜைகளாக பிரித்தானியா, இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் முன்னிலை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.