ஆற்றிலிருந்து வெளிப்பட்ட 600 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலைகள்
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக யாங்சே ஆற்றில் இருந்து பழங்காலத் தீவின் இடிபாடுகள் தோன்றியுள்ள நிலையில், அவற்றில் 600 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலைகள் இருப்பதாக சீனாவின் சர்வதேச செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த புத்தர் சிலைகள் தீவின் மிக உயரமான பகுதியான போடெலியாங் பகுதியில் இருந்து வெளிவந்துள்ளன. அவை மிங் மற்றும் கிங் வம்சங்களுக்கு இடையில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
கடும் வறட்சி காரணமாக சீனாவில் உள்ள 66 ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன . இந்நிலையில் யாங்சே நதி ஆசியாவின் மிக நீளமான நதி மற்றும் உலகின் மூன்றாவது நீளமான நதியாகும்.
ஒரு நாட்டின் வழியாக ஓடும் உலகின் மிக நீளமான நதியும் இதுதான். டாங்யுலா மலைத்தொடரில் தொடங்கி, சீனா வழியாக 6300 கி.மீ பாய்ந்து கிழக்கு சீனக் கடலில் விழுகிறது.
வறட்சி காரணமாக யாங்சே ஆற்றின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் யாங்சி படுகையில் மழை அளவு வழமையை விட 45% குறைவாக இருந்தது.
இதனால் நதி படுகையில் இருந்த 600 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலைகள் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன.