ரஷ்யாவில் கல்லறைகள் மட்டும் இருக்கும் மர்ம கிராமம்!
இந்த உலகம் பல மர்மங்கள், அதிசயங்கள் நிறைந்தது. அப்படி ஒரு மர்மமான பகுதியாக திகழ்கிறது ரஷ்யாவில் ஒரு கல்லறை கிராமம் .
ரஷ்யாவின் வடக்கு ஒசேஷியாவில் உள்ள மலைப்பகுதி தற்போது மிகவும் வெறிச்சோடி காணப்படுகின்றது. இங்கு பயத்தாலும் மர்மத்தாலும் யாரும் வருவதில்லை.
இந்த உயரமான மலைகளுக்கு நடுவே 99 கல்லறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் இறந்துபோன தங்கள் உறவினர்களை இங்கு அடக்கம் செய்ததால் இங்கு கல்லறை உருவானதாக கூறப்படுகிறது.
இந்த இடத்தை அடைவதற்கான வழியும் மிகவும் கடினமாக உள்ளதாம். மலைகளுக்கு இடையிலான குறுகிய பாதைகள் வழியாக இங்கு செல்ல சுமார் மூன்று மணி நேரம் ஆகும். இங்கு உள்ள கல்லறைகளுக்கும் ஒரு கதை உள்ளது.
ஒவ்வொரு கல்லறைகளும் ஒரு குடும்பம் அல்லது குலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இங்கு உள்ள மக்களிடையே ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது.
அதன்படி இறந்தவர்கள் சொர்க்கத்தை அடைய நதி வழியே செல்ல வேண்டும் என இந்த மக்கள் நம்புகின்றனர். இங்கு சில கல்லறைகளில் படகுகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இறந்தவர்கள் சொர்க்கத்தை அடைய இந்த படகு உதவியதாக இந்த மக்கள் நம்பியுள்ளனர். ஆகவே இறந்த மக்களை படகில் வைத்து புதைத்துள்ளனர். அதே போல் ஆராய்ச்சியாளர்கள் பல கல்லறைகள் முன்பும் ஒரு கிணறு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
கல்லறையில் தங்கள் உறவினர்களை அடக்கம் செய்த பின்னர் கிணற்றில் நாணயங்களை வீசுவார்களாம். நாணயங்கள் கீழே இருக்கும் கற்களுடன் மோதினால் அவர்களின் ஆன்மா சொர்க்கத்தை அடையும் என நம்புகின்றனர்.
ரஷ்யாவிலிருக்கும் இந்த வித்தியாசமான கலாச்சாரம் குறித்து வெளியுலகிற்கு பெரிய அளவில் தெரிவதில்லை, இந்த கிராமம் உலகின் மிக மர்மமான பகுதியாக கருதப்படுகிறது.