விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்; அதிகாரிகள் அதிரடி முடிவு!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான ஊழியரிடம் மோசமாக நடந்துகொண்ட பயணி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
சம்பவம் செவ்வாய்க்கிழமை தாய்லந்து பேங்கொங்கிலிருந்து சிங்கப்பூர் சென்றடைந்த SQ711 விமானத்தில் தனக்குத் தண்ணீர் கொடுக்க மறுத்த ஊழியரிடம் அந்த நபர் கடும் வாக்குவாதம் செய்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.
கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய அந்த நபர் ஊழியரை கீழே தள்ளிவிடப்போவதாகவும் மிரட்டினார். இதையடுத்துப் பாதுகாப்பு அதிகாரி வரவழைக்கப்பட்டு அந்த நபர் விமானத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் செய்தி நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸைத் தொடர்புகொண்டது. அதற்கு நிறுவனம் பதிலளித்துள்ளது. விமானத்தில் உணவு பரிமாறப்பட்டபோது அந்த நபர் மிக மோசமாக நடந்துகொண்டார்.
பயணத்தின்போது அவர் பலமுறை மதுபானம் கேட்டதாகவும் இதர பயணிகளின் நலன் கருதி ஊழியர்கள் அதனைப் பணிவுடன் மறுத்துவிட்டதாகவும் நிறுவனம் கூறியது. ஊழியர்கள் வழங்கிய பாதுகாப்பு வழிமுறைகளையும் அந்தப் பயணி பின்பற்றவில்லை.
மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு அவர் நடந்துகொண்டதாக நிறுவனம் தெரிவித்தது. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் சென்றடைந்ததும் அந்த நபர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பயணிகளின் பாதுகாப்புக்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறிய நிறுவனம் நடந்த சம்பவத்திற்காகப் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.