கல் குவாரி ஒன்றில் திடீர் சரிவு: உயிருடன் மண்ணில் புதைந்த சாரதி! தீவிர போராட்டத்தில் மீட்புபடையினர்
புதுக்கோட்டை பகுதியில் இயக்கிவரும் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்றில் ஏற்பட்ட சரிவில் சாரதி ஒருவர் புதைந்த நிலையில் தீயணைப்பு படையினர் அவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
குறித்த விபத்து தமிழ்நாட்டில் புதுக்கோட்டை - உடையாளிப்பட்டி அருகே கிள்ளுக்குளுவாய்பட்டியில் இடம்பெற்றுள்ளது.
இந்த கல்குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகள், சரளை போன்றவை ஜல்லி கற்களாக உடைக்கப்பட்டும், கிரஷர் மண் தாயாரிக்கப்பட்டும், புதுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் தினமும் காலை முதலே தொடங்கி நடைபெறும். வழக்கம்போது இந்த கல் குவாரிக்குள் அதே பகுதியை சேர்ந்த 40 வயதான ஹிட்டாச்சி பொக்லைன் சாரதி லட்சுமணன் என்பவர் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
100 அடி ஆழத்தில் அவர் ராட்சத பொக்ளைன் மூலம் கற்களை பெயர்த் தெடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தார். பாறைகளை அகற்றுவதற்காக அவர் ராட்சத பொக்லைன் எந்திரத்தை வைத்து பக்கவாட்டு மண்ணை வெட்டியுள்ளார்.
அப்போது அதன் அதிர்வு தாங்காமல் கல் குவாரியின் ஒரு பகுதி மளமளவென சரிந்துள்ளது. இதனை கண்டு அங்கு பணியில் இருந்த கூலி தொழிலாளிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.
இருப்பினும், ஹிட்டாச்சி வாகனத்திற்குள் அமர்ந்திருந்த சாரதி லட்சுமணன் மண் சரிவதை கண்டு சுதாரித்து, அந்த எந்திரத்திற்குள் இருந்து வெளியேறுவதற்குள் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் பாறை மற்றும் மண் சரிந்து ஹிட்டாச்சி எந்திரத்தையே மூடியது. இதனால் லட்சுமணன் வெளியேற முடியாமல் மண்ணில் புதைந்து சிக்கிக் கொண்டார். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த தொழிலாளிகள் மண் மற்றும் பாறைகளை அகற்ற முயற்சித்தனர்.
ஆனால் அது முடியாத காரியம் என்று தெரியவரவே உடனடியாக புதுக்கோட்டை பொலிஸார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு வீரர்களும், பொலிஸாருக்கு அங்கு வந்து தொழிலாளர்களின் உதவியுடன் பாறை குவியல் மற்றும் மண்ணை அகற்றி உள்ளே சிக்கி உள்ள லட்சுமணனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.