கனடாவில் பிஸ்தா உற்பத்திகள் குறித்த எச்சரிக்கை
கனடாவில் பிஸ்தா மற்றும் பிஸ்தா சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களுடன் தொடர்புடைய சால்மொனெல்லா தொற்று பரவல் மானிடோபாவிற்கும் பரவியுள்ளது.
பொதுச் சுகாதார நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, மானிடோபாவில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலையில் சால்மொனெல்லா கலக்கத்தால் ஹபிபீ Habibi பிராண்ட் பிஸ்தா கர்னல் தயாரிப்புகள் திரும்பப் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கனடிய உணவு ஆய்வகம் (CFIA) அதே பிஸ்தாவை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பல தயாரிப்புகளுக்கும் திரும்பப்பெறும் அறிவிப்புகளை வழங்கியுள்ளது.

பிஸ்தா தயாரிப்புகள்
இதுவரை 70-க்கு அருகில் பிஸ்தா தயாரிப்புகளுக்கு திரும்பப் பெறும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டாம். அவை உடனடியாக குப்பையில் போடப்பட வேண்டும் அல்லது வாங்கிய கடைக்கு திருப்பி அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவற்றை உணவாக எடுத்துக்கொண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக நினைத்தால், மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய அளவில் இதுவரை, 155 பேர் பாதிப்பு என்பதுடன் 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த பாதிப்பு காரணமாக இதுவரையில் நாட்டில் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.
ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்டவை மட்டுமே இவை என்பதால், உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.