ரஷ்யாவின் நடவடிக்கையை விமர்சித்த அமெரிக்கா!
உக்ரைனின் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைத்து கொள்வது நில அபகரிப்பு நடவடிக்கை என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்து வருகிறது.
உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களையும் அதிகாரபூர்வமாக ரஷ்யாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷ்ய அதிபர் மாளிகையில் கோலகலமாக நடைபெறும் போது இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அதிபர் புடின்(Vladimir Putin) வெளியிடுவார்.
ரஷ்ய அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய தலைநகரில் கூடியுள்ளனர். உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தங்கள் நாட்டுடன் இணைத்து கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளதை நில அபகரிப்பு நடவடிக்கை என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது.
அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன்(Anthony Blinken) பேசுகையில், சர்வதேச சட்டங்களின் படி ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது.
உக்ரைனில் ரஷ்ய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக தன்னுடன் இணைத்து கொள்வதை அமெரிக்கா ஒருபோதும் அங்கீகரிக்காது என்று தெரிவித்தார்.
மறுமுனையில், ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்(Dmitry Peskov) கூறியதாவது இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையின் ஜார்ஜிய மண்டபத்தில் 15:00 மணிக்கு ரஷ்யாவுடன் புதிய பிரதேசங்களை இணைத்தல் தொடர்பான கையெழுத்திடும் விழா நடைபெறும் என்று தெரிவித்தார்.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன.