இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம்; அச்சத்தில் மக்கள்
இந்தோனேசியாவில் கனமழை, சூறாவளி மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு 700 பேர் பலியாகி உள்ள நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
இந்தோனேசியாவில் கனமழை, சூறாவளியால் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே புயல், வெள்ளத்தில் சிக்கி மக்கள் பலியாகி, நிவாரண பொருட்கள் கிடைக்க முடியாமல் திணறி வரும் சூழலில், நிலநடுக்க பாதிப்பும் அவர்களை துயரில் தள்ளியுள்ளது.
27 கோடி பேருக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியாவில் நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.