இஸ்ரேலில் அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்
லெபனான் மீதான தொடர் தாக்குதல்கள் மற்றும் ஈரானுடனான போர்ச் சூழலுக்கு மத்தியில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரி டெல் அவிவ் நகரில் நேற்றிரவு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஈரான் மற்றும் லெபனான் மீதான போர் நடவடிக்கைகளுக்கு ஒருபுறம் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மறுபுறம் இஸ்ரேலிய இராணுவத்தில் இணைய மறுக்கும் அதி-தீவிர பழமைவாத சமூகத்தினரால் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் பதற்றமும் இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டத்தில் கலந்துகொண்ட 83 வயது ஓய்வூதியதாரரான டேவிட் அல்கன், "இந்த அரசாங்கம் ஒரு பேரழிவு. இது தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.
பொதுமக்கள் மத்தியில் பொய்களையும் போலிச் செய்திகளையும் பரப்பி வருகின்றனர்.
ஈரானை விடவும் ஆபத்தான எதிரி நமக்குள்ளேயே (உள்நாட்டில்) இருக்கிறான். இராணுவத்தில் சேர மறுத்து, உழைக்காமல், வரி கட்டாமல் எங்களது வரிப்பணத்தில் வாழும் ஒட்டுண்ணிகளே அந்த ஆபத்தான எதிரிகள்," என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில் இஸ்ரேலிய அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக, "இனப்படுகொலையை நிறுத்து", "அக்டோபர் ஏழை மறந்துவிடு" போன்ற வாசகங்களுடன், பிரதமர் நெதன்யாகுவை முன்னாள் கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபாருடன் ஒப்பிட்டு "பிபி எஸ்கோபார்" எனச் சாடி போராட்டக்காரர்கள் முழக்கமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலில் நிலவும் இந்தப் போர்க்கால நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் நெதன்யாகுவுக்கு எதிராகத் திரண்டுள்ள மக்கள் அலை, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.