டொனால்டு ட்ரம்ப் மீதான தாக்குதல் தொடர்பில் வெளியான கண்டனம்
அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்பின் பேரணியில் நடந்த கொலை முயற்சி தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இன் செய்தித் தொடர்பாளர் இந்த துப்பாக்கிச் சூடு ஒரு அரசியல் வன்முறை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவிக்கையில், நடந்த சம்பவம் பேரதிர்ச்சியை தருவதாகவும், எந்த வடிவத்திலும் அரசியல் வன்முறைக்கு நம் சமூகத்தில் இடமில்லை எனவும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவிக்கையில், ஜனநாயகத்திற்கு சவால் விடும் எந்தவொரு வன்முறைக்கும் எதிராக நாம் உறுதியாக நிற்க வேண்டும் என கூறியுள்ளார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்ரம்ப் மீதான கொலை முயற்சி தம்மை பாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
டொனால்டு ட்ரம்பை மிக சமீபத்தில் சந்தித்துள்ள ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் இந்த நெருக்கடியான சூழலில் தமது பிரார்த்தனைகள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதிக்கானது என தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவிக்கையில், நடந்த சம்பவங்களை தாம் அச்சத்துடன் கவனித்து வருவதாகவும், ட்ரம்ப் விரைவில் குணமடைய தாம் வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா பிரதமர் நரேந்திர மோடி நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடத்தப்பட்டது.
தாக்குதல்தாரி உளவுத்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவரது பெயர் உள்ளிட்ட தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.