சுற்றி வளைத்த பொலிஸ்... லண்டன் இளைஞருக்கு நேர்ந்த துயரம்
பிரிட்டனில் பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிய ஒருவர் தேம்ஸ் நதியில் தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 வயதேயான அந்த நபரை கைது செய்யும் பணியில் பொலிசார் ஈடுபட்டிருந்தனர், ஆனால் அவர் பொலிசாரிடம் இருந்து தப்பியபோது இன்னும் கைவிலங்கு போடவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2 மணி நேர தீவிர தேடலுக்கு பின்னர் குறித்த இளைஞரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார்,
கிங்ஸ்டன் பிரிட்ஜில் ஒரு ஆணும் பெண்ணும் வாய்த் தகராறில் ஈடுபடுவதை அறிந்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். விசாரணையில், திருட்டு தொடர்பான வாக்குவாதம் என தெரியவர, பொலிசார் அந்த இளைஞரை கைது செய்ய முடிவு செய்தனர்.
ஆனால் பொலிசாரிடம் இருந்து தப்பிய அந்த இளைஞர் சட்டென்று நதியில் தவறி விழுந்துள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் இறுதியில், சுமார் 12.30 மணியளவில் மரணமடைந்துள்ள நிலையில் இளைஞரை சடலமாக மீட்டுள்ளனர்.
மேலும், இளைஞரின் பெயர் உள்ளிட்ட தகவலும் புகைப்படமும், முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் வெளியிடப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.