பிலிப்பின்ஸின் பாதுகாப்பை மேம்படுத்த ட்ரோன்களை வழங்கிய அவுஸ்திரேலியா
பிலிப்பின்ஸ் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த அவுஸ்திரேலிய அரசு ட்ரோன்களை வழங்கியுள்ளது.
தெற்கு சீனா கடல் பகுதியில் பிலிப்பின்ஸ் நாட்டின் கடல் எல்லைக்குள் சீன கப்பல்கள் அத்துமீறுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இதனால், பிலிப்பின்ஸ் நாட்டின் கடல் பகுதியின் பாதுகாப்பை அதிகரிக்க அவுஸ்திரேலிய அரசு 20 அதிநவீன ட்ரோன்களை வழங்கியுள்ளது.
பிலிப்பின்ஸின் பட்டான் மாகாணத்தில் கடந்த ஏப்.8 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவுஸ்திரேலிய நாட்டு தூதர் ஹே கியோங் யூ சுமார் 5,92,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான டிரோன்களை பிலிப்பின்ஸின் கடல் பாதுகாப்புக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும், பிலிப்பின்ஸ் கடற்படையைச் சேர்ந்த 30 வீரர்களுக்கு அந்த ட்ரோன்களை இயக்குவது குறித்து அவுஸ்திரேலிய சார்பில் 4 நாள்கள் பயிற்சியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன ட்ரோன்களின் மூலம் பிலிப்பைன்ஸின் மேற்கு கடல் பகுதிகளில் மிகப் பெரியளவிலான கண்காணிப்புகள் மேற்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, அவுஸ்திரேலியாவுக்கு சீனாவுடன் நிலம் சார்ந்த பிரச்னைகள் இல்லாத போதிலும் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தோ-பசிபிக் பகுதிகளில் அவுஸ்திரேலியாவின் வான்வழி மற்றும் கடல்வழி செயல்பாடுகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.