இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் இரத்தக்களரி ; பாகிஸ்தான் ராணுவம் மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் போது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அரசுக்கு எதிராக போராடி வரும் கூட்டு அவாமி அதிரடிக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதியில் பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ராவலகோட் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
இதில், போராட்டங்களை ஒருங்கிணைக்கும் கூட்டு அவாமி அதிரடிக்குழுவின் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊர்வலத்தின் போது மக்கள் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாகவும், அதன் பின்னர் பாதுகாப்புப் படையினர் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் அவாமி அதிரடிக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கம் அல்லது பாதுகாப்புப் படையினரிடமிருந்து உடனடி உத்தியோகபூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான தகவல்களை சுயாதீனமாக உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்துவருகின்றன.