கனடாவில் வேலையற்றோர் தொடர்பில் வெளியான தகவல்
கனடாவின் வேலை சந்தை நவம்பரில் பொருளாதார நிபுணர்களை மீண்டும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாட்டில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவானதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சிறு அளவிலான வேலை இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளன.
வேலைஇல்லா விகிதமும் அக்டோபரில் இருந்த 6.9% இலிருந்து நவம்பரில் 6.5% ஆகக் குறைந்துள்ளது.

புதிய வேலைகள்
மேலும் 26,000 பேர் தொழிலாளர் சந்தையை விட்டு வெளியேறியதால் இந்த விகிதம் குறைய காரணமாகியுள்ளது.
செப்டம்பர் முதல் நவம்பர் வரை மொத்தம் 181,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளன. அதற்கு முன்பாக ஜனவரி முதல் வேலை சந்தை மந்த நிலையில் இருந்தது. நவம்பரில் அதிகமான வளர்ச்சி பகுதி நேர வேலைகளில் இருந்ததாக கணக்குகள் தெரிவிக்கின்றன.
கட்டாயத்தால் பகுதி நேரத்தில் பணியாற்றுவோரின் விகிதம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பெரிதாக மாறவில்லை; இது கொரோனா காலத்துக்கு முன் இருந்த சராசரி அளவைக் காட்டிலும் குறைவு. 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 50,000 வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
இது 2025ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இளைஞர் வேலைவாய்ப்பில் உயர்வாகும். இளைஞர்களின் வேலைவாய்ப்பு விகிதம் ஜூலை மாதத்தில் பதிவான குறைந்த மட்டத்திலிருந்து 1.7% உயர்ந்து 55.3%ஆக உயர்ந்துள்ளது.