அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு பதிலடி கொடுக்கும் கனடா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உலகளாவிய வர்த்தக போருக்கு பதிலளிக்கும் வகையில் கனடா சுங்க வரிகளை மேலும் அதிகரித்துள்ளது.
புதன்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான நாடுகளின் பொருட்களுக்கு 10% அடிப்படை சுங்க வரி மற்றும் பல நாடுகளுக்கு கூடுதல் சுங்கக் கட்டணங்கள் அமலில் வந்தன.
இந்த அறிவிப்பின் பின்னணியில் உலக சந்தைகளில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டிருந்தன.
எல்லாம் நன்றாக நடைபெறும். அமெரிக்கா முந்தையதை விட பெரியதாகவும் சிறப்பாகவும் மாறும்!” என டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆனால், அதே நேரத்தில் உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொருளாதார சக்திகள் ஒன்றுக்கொன்று சுங்க வரிகளை அதிகரித்து வருவதால் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளது.
ட்ரம்ப் சீனாவுக்கான சுங்க வரிகளை 104% ஆக உயர்த்த, சீனா பதிலளிக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு மொத்தமாக 84% வரை சுங்க வரிகளை விதித்துள்ளது.
அமெரிக்கா ஆட்டோமொபைல், உருக்கு மற்றும் அலுமினியத்திற்கு விதித்துள்ள சுங்க வரிகளுக்கு பதிலடி நடவடிக்கையாக, ஒட்டாவா புதன்கிழமை கனடாவுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு சுங்க வரி விதித்துள்ளது.
அமெரிக்காவின் சுங்க வரிகளைப் போல் அல்லாமல், கனடாவின் சுங்கங்கள் வாகன பாகங்கள் அல்லது மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களையும் பாதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ட்ரம்ப் வர்த்தக நெருக்கடிக்கு காரணமாக இருக்கிறார். கனடா தற்போது நோக்கத்துடனும் திடமான பதிலுடனும் செயலில் ஈடுபடுகிறது,” என பிரதமர் மார்க் கர்னி குறிப்பிட்டுள்ளார்.