காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றதாக இந்தியப் பெண் கைது
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குர்விந்தர் சிங். 2019ஆம் ஆண்டு, கனடாவில் வாழ்ந்துவந்த ரூபிந்தர் கௌர் என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார் குர்விந்தர்.
திருமணத்துக்குப் பின் கனடா சென்ற கௌர், 2024ஆம் ஆண்டு கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில், ஹர்கவல்பிரீத் சிங் என்னும் நபரும் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, கௌரின் கணவரான குர்விந்தர், தனது வீட்டின் கூரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, குர்விந்தரின் சகோதரியான மன்வீர் கௌர், குர்விந்தரின் மனைவியான ரூபிந்தர் கௌர் மற்றும் அவரது காதலரான ஹர்கவல்பிரீத் சிங் ஆகியோர் மீது இந்திய பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.
மன்வீரும் அவரது பெற்றோர் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கனடாவில் வாழ்ந்துவருகிறார்கள்.
தன்னிடம் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் தன் சகோதரரான குர்விந்தர், தன் மனைவி ரூபிந்தர் குறித்து கூறிய சில விடயங்களை பொலிசில் தெரிவித்துள்ளார் மன்வீர்.
தான் விருப்பப்பட்டு குர்விந்தரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், கனடாவில் செட்டில் ஆகி வசதியாக வாழ்ந்துவந்த தன்னை தனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்துவைத்துவிட்டதாகவும் அடிக்கடி குர்விந்தரிடம் கூறிவந்துள்ளார் ரூபிந்தர்.
மேலும், தனது மனைவியான ரூபிந்தர் கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்டபோது, அதே நேரத்தில் நாடுகடத்தப்பட்டவரான ஹர்கவல்பிரீத் சிங்குக்கும், ரூபிந்தருக்கும் தவறான உறவு இருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் தன் சகோதரியிடம் தெரிவித்துள்ளார் குர்விந்தர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 28ஆம் திகதி தன்னை அழைத்த குர்விந்தர், தன் மனைவியும் அவரது காதலரும் சேர்ந்து தன்னைக் கொன்றுவிட்டு, தங்கள் நிலத்தை அபகரிக்க திட்டமிடுவதாகத் தெரிவித்ததாக கூறுகிறார் குர்விந்தரின் சகோதரியான மன்வீர்.
அன்று இரவே, தன் சகோதரர் கொல்லப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ள மன்வீர், உடனடியாக இந்திய பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, குர்விந்தரின் மனைவியான ரூபிந்தர் கௌர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காதலர் என சந்தேகிக்கப்படும் ஹர்கவல்பிரீத் சிங் தலைமறைவாகிவிட்டார்.
பொலிசார், ஹர்கவல்பிரீத் சிங்கை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.