கனடாவில் மீண்டும் உச்சம் பெற்ற பாதிப்பு: இறுகும் கட்டுப்பாடுகள்
கனடாவில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர், புதன்கிழமை ஒரே நாளில் 14,995 பேர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது உச்ச எண்ணிக்கை என கூறப்படுகிறது.
கனடாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. புதன்கிழமை மட்டும் 14,995 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை 11,690 பேர்களுக்கும் திங்கட்கிழமை 10,665 பேர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி கனடாவில் 7 நாட்களில் சராசரியாக பதிவான எண்ணிக்கை 10,487 என்றே தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சம் கண்டுள்ள நிலையில், கனேடிய பிராந்தியங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பல பிராந்தியங்களில் ஓமிக்ரான் பரவல் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மாற்றம் செய்வதால் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என முதன்மை மருத்துவர்கள் தரப்பும் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதன்கிழமை இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகிறது. ஆல்பர்ட்டாவில் வெள்ளிக்கிழமை முதற்கொண்டு கட்டுப்பாடுகள் அமுலுக்கு கொண்டுவரப்படுகிறது.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கியூபெக்கில் அதி உச்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பதிவான 6,361 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 80% பேர்களுக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.