கனடாவில் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை: அதிர்ச்சி தகவல்
கனடாவில் அநேகமான மருத்துவர்கள் கடுமையான மன அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர்களின் உளச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்னரான காலப் பகுதியை விடவும் தற்பொழுது மருத்துவர்களின் உளச் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனேடிய மருத்துவ ஒன்றியத்தின் தேசிய மருத்துவர்களின் சுகாதாரம் குறித்த கருத்துக் கணிப்பு அறிக்கை நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 53 வீதமானவாகள் அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்புடன் ஒப்பீடு செய்யும் போது தற்பொழுது மருத்துவர்கள் தங்களுக்கான வேலைபளு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சில மருத்துவர்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாங்கள் சேவை வழங்கும் நேரத்தை திருத்தி அமைத்துக் கொள்ள விரும்புவதாக அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெருந்தொற்று காரணமாக அநேகமான மருத்துவர்கள் வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சுகாதாரத்துறை எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.