ரத்தாகும் விமானங்கள்.... நாடு திரும்ப முடியாமல் வெளிநாட்டில் சிக்கிய கனேடியர்கள்
தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், தென்னாபிரிக்காவில் சிக்கியுள்ள கனேடியர்கள் நாடு திரும்ப முடியாமல் அவதிப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றின் ஓமிக்ரான் மாறுபாடு தென்னாபிரிக்காவில் சிக்கியுள்ள கனேடியர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு உறவினர்களை சந்திக்க சென்ற பெண் ஒருவர் தற்போது கனடா திரும்ப முடியாமல் உள்ளார். தென்னாபிரிக்கா உட்பட 10 ஆபிரிக்க நாடுகளில் இருந்து கனடாவுக்கு நேரடி விமான சேவைகள் ரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இன்னொரு நாட்டில் இருந்து கனடாவுக்கு வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனடா நிர்வாகத்தின் விதிகள் மக்களை வதைப்பதாக உள்ளது எனவும், உறுதியான தகவல்கள் தங்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
எகிப்து, மலாவி மற்றும் நைஜீரியாவுடன் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆறு அண்டை நாடுகளின் குடிமக்கள் கனடாவுக்கு வர முடியாது. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து நாடு திரும்பும் கனேடியர்கள், பயணத்திற்கு முன்னர் கண்டிப்பாக கொரோனா சோதனை முன்னெடுக்க வேண்டும்.
விமானம் கனடாவில் தரையிறங்கிய பின்னரும் கொரோனா சோதனை முன்னெடுக்க வேண்டும். மட்டுமின்றி, அரசு குறிப்பிடும் இடத்தில் தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக வேண்டும்.