அமெரிக்க கனடிய தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு
கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நாளை வாஷிங்டனில் உள்ள கெனெடி மையத்தில் குறுகிய சந்திப்பை நடத்த உள்ளனர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, கார்னி, மெக்சிக்கோ அதிபர் கிளௌடியா ஷெய்ன்பாம் அவர்களையும் தனிப்பட்ட முறையில் சந்திக்க உள்ளார். ஷெய்ன்பாம், அமெரிக்க அதிபரையும் தனியாகச் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று தலைவர்களும், 2026 கால்பந்து உலகக்கோப்பைக்கான (FIFA World Cup 2026) சீட்டிலுப்பு நிகழ்வில் பங்கேற்க வாஷிங்டனுக்கு வந்துள்ளார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த சீட்டிழுப்பு, போட்டி எந்த நாடுகளில் எவ்வாறு பிரிக்கப்படும் என்பதை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாகும். சில நாட்களுக்கு முன்பு, இந்த நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதியை காணலாம் என பிரதமர் கார்னி கூறியிருந்தார்.
ஆனால் அப்போது சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. தற்போது, கனடா – அமெரிக்கா இடையே வரி (Tariff) தொடர்பான வர்த்தக மோதல் நீடித்து வருகிறது.
இந்த முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், கடந்த அக்டோபரில் திடீரென நிறுத்தப்பட்டன.
ஒன்டாரியோ மாகாண அரசு தயாரித்த ஒரு விளம்பரம் தொடர்பில் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்ததால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.
கார்னி அதற்காக மன்னிப்பு தெரிவித்து, வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பும் பொழுதே கனடா பேச தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.