ரஷியாவிடம் கெஞ்சிய சீனா! எதற்கு தெரியுமா?
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடியும் வரை போரை தவிர்க்கும்படி ரஷியாவிடம் சீனா கேட்டு கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. ஐ.நா. அமைப்பு, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், போரை நிறுத்த கூறி வருகிறது.
எனினும், இன்று எட்டாவது நாளாகவும் போர் தீவிரமடைந்து உள்ள நிலையில், அமெரிக்கா ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்ததுடன், பொருளாதார தடைகளை விதித்து அச்சுறுத்தியது. போரில் ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாடு செயல்பட்டு வருவதுடன், வேறு சில நாடுகள் நடுநிலைமை வகிக்கின்றன.
இதில், ரஷியாவின் அண்டை நாடாக உள்ள சீனா பல ஆண்டுகளாகவே ரஷியாவுடன் பொருளாதார, தூதுரக மற்றும் ராணுவ உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் முடியும் வரை போரை தவிர்க்கும்படி ரஷியாவிடம் சீனா கேட்டு கொண்ட தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து , தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
ரஷியாவின் படையெடுப்புக்கு முன் ரஷியாவின் போர் திட்டங்கள் அல்லது நோக்கங்கள் ஆகியவை பற்றி மூத்த சீன அதிகாரிகளுக்கு முன்பே தெரியவந்துள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க விழா கடந்த மாதம் தொடங்கும் முன்பு, ஜின்பிங்கை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில், இரு நாடுகளின் உறவில் எந்த எல்லையும் இல்லை என அறிவிப்பு வெளியானது. நேட்டோ விரிவாக்கத்தினை புறந்தள்ளிய அவர்கள், உண்மையான ஜனநாயகத்துடன் ஒரு புதிய உலக உத்தரவை நிலைநிறுத்துவோம் என உறுதி கூறினர் என்று அந்த செய்தி தெரிவித்து உள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான நிறைவு விழாவை கடந்த பிப்ரவரி 20 ஆம் திகதி சீனா நடத்தியது. அதற்கு அடுத்த நாள், புதின் உத்தரவுப்படி கூடுதல் ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனுக்குள் நுழைந்தது.
ஜின்பிங் மற்றும் புதின் ஆகிய அந்த நாடுகளின் இரு தேசிய தலைவர்களும், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய ஆலோசனைகளுக்கு முன் 37 முறை சந்தித்து பேசியுள்ளனர்.
உக்ரைன் படையெடுப்புக்கு முன்பு, ஒரு புதிய பைப்லைன் வழியே எரிவாயுவை சீனா வாங்குவதற்கான 30 ஆண்டு ஒப்பந்தம் பற்றி இரு நாடுகளும் அறிவித்தன.
மேலும் ரஷிய கோதுமை இறக்குமதிக்கு விதித்த தடையை சீனா நீக்கியது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.