பெற்றோராகும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்த வெளிநாடு நிறுவனம்!
சீனாவின் மிக பிரபலமான ஒன்லைன் பயண நிறுவனம் ஒன்று தங்களது ஊழியர்களுக்கு பெற்றோராகும் ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த திட்டமானது நாளை, 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
அதிக மக்கள்தொகையுடன் போராடும் சீனாவில் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் முதல் முயற்சி இதுவென கூறுகின்றனர்.
உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 400 மில்லியன் பயனாளர்களை கொண்ட இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அடுத்த ஐந்து ஆண்டுகள் பெற்றோராகும் தங்கள் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 10,000 யுவான் ஊக்கத்தொகை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டமானது உலகெங்கிலும் செயல்படும் தங்கள் ஊழியர்களுக்கு பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது மட்டுமின்றி, குறித்த திட்டத்திற்கு என 1 பில்லியன் யுவான் செலவிட முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மேலும், மகப்பேறு தொடர்பாக சாதகமான சூழலை தங்கள் நிறுவனத்தில் ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சீனாவில் 1980 தொடக்கம் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற திட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி வந்தனர். எனினும் 2015ல் அந்த திட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்ததுடன், சீன மக்கள்தொகையில் அதிகமானோர் மூத்த குடிமக்களாகும் சூழல் உருவாகும் எனவும் எச்சரித்தனர்.
மேலும், உழைக்கும் மக்களின் எண்ணிக்கை சரிவடைந்ததுடன், முதியோர் தொடர்பில் அதிக தொகையை செலவிடும் கட்டாயத்திற்கு உள்ளூர் அரசாங்கம் தள்ளப்பட்டது.
மேலும் 2021ல் சீன தம்பதிகள் மூன்று பிள்ளைகள் வரையில் பெற்றுக்கொள்ளலாம் என நிர்வாகிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கூட சீன தம்பதிகள் மகப்பேறு தொடர்பில் முடிவெடுக்கவில்லை என்றே கூறுகின்றனர்.
இந்த நிலையில் தான், பிரபலமான இந்த ஒன்லைன் பயண நிறுவனம் பெற்றோராகும் ஒவ்வொரு ஊழியருக்கும் சுமார் 7,000 டொலர் ஊக்கத்தொகை வழங்க முன்வந்துள்ளது