வலுவடையும் சீனா ரஷ்யா உறவு!
சீனா அதிபர் ஜி ஜின்பிங்குக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்திருக்கிறார்.
இந்த உரையாடலின்போது சீன-ரஷ்யா உறவை மேலும் உறுதியாக்குவது குறித்து இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.
ஆசியா என்பது மிகப்பெரிய மார்க்கெட். உலகின் முதல் இரண்டு பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகளும் இங்குதான் இருக்கின்றன.
எனவே இந்த பிரம்மாண்டமான மார்க்கெட்டை கைப்பற்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
சீனாவுடைய பொருளாதார கொள்கைகள், வெளியுறவு கொள்கைகள் காரணமாகவும் அது கம்யூனிச ஆட்சியின் கீழ் இருப்பதாலும் அங்கு முதலீடு செய்வதை பெரும் நிறுவனங்கள் விரும்பவில்லை.
எனவே இந்தியா பக்கமாக இவர்களது கவனம் திரும்பியிருக்கிறது. சூழல் இப்படி இருக்கையில் ரஷ்யாவுடனான உறவை மேலும் பலப்படுத்த விரும்புவதாக சீனா கூறியுள்ளது.
தற்போது சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. வாழ்த்து தெரிவிக்க அதிபர் ஜி ஜின்பிங்குக்கு ஃபோன் செய்த புதின், இரு நாட்டு உறவுகள் குறித்து பேசியிருக்கிறார்.
இந்த உரையாடலில், சர்வதேச பலதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதில் பெய்ஜிங் மாஸ்கோவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.
இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதனை சுட்டிக்காட்டிய சீன அதிபர், ரஷ்யாவின் பணிகளையும், நிலைப்பாட்டையும் சீனா ஆதரிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் ரஷ்யாவுடனான பலதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மிக முக்கியமாக வெளி சக்திகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதை இரு தரப்பினரும் உறுதியாக எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதற்கு காரணம் அமெரிக்காவின் நேட்டோ படையில் உக்ரைன் இணைய முயன்றதுதான்.
அதாவது, அமெரிக்கா எனும் வெளி சக்தி ரஷ்யாவின் பக்கத்து நாடான உக்ரைனை தன்வசப்படுத்த முயன்றதை சீனா சுட்டிக்காட்டி பேசியிருக்கிறது.
அதேபோல சீனாவுக்கு பக்கத்தில் இருக்கும் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
எனவே இந்த இரண்டு விஷயத்தை குறிப்பிடும் விதமாகத்தான், வெளி சக்திகளை எதிர்க்க வேண்டும் என்று சீன அதிபர் பேசியிருக்கிறார்.
இது தவிர 2024 என்பது சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் ஸ்பெஷலான ஆண்டாகும். கடந்த 75 ஆண்டுகளாக இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி செய்து பயணித்து வந்திருக்கிறது.
இப்படி இருக்கையில், இதனை கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் இரு நாட்டு தூதரகங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றன.
இரு நாட்டு உறவுகள் வலுவடைவது தொடர்ந்தால், ஆசியாவில் இந்த நாடுகளின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருக்கும். இந்தியாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் இருக்கும் உறவு இதன் மூலமாக சிக்கலை சந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.