புதிய முதலீடு மூலம் குடியுரிமை திட்டம் ; அர்ஜென்டினா அரசு அறிவிப்பு
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில், முதலீட்டின் மூலம் அர்ஜென்டினா குடியுரிமை பெறுவதற்கான புதிய திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ‘அர்ஜென்டினா வாரம்’ என்ற வணிக நிகழ்வில், அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் லூயிஸ் கபுடோ மற்றும் அமைச்சரவைத் தலைவர் டியேகோ சாண்டில்லி ஆகியோர் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, வெளிநாட்டவர்கள் அர்ஜென்டினா குடியுரிமை பெற இரண்டு முதலீட்டு வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதலாவது வழியாக, அர்ஜென்டினா தேசிய கருவூலத்திற்கு சுமார் 350,000 அமெரிக்க டொலர் (சுமார் ரூ.3.37 கோடி) திருப்பிச் செலுத்தப்படாத நிதியுதவியாக வழங்க வேண்டும்.
இரண்டாவது வழியாக, சுமார் 800,000 அமெரிக்க டொலர் (சுமார் ரூ.7.70 கோடி) மதிப்பிலான அந்நாட்டு அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டை ஏழு ஆண்டுகளுக்கு மீளப்பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடும்பத்துடன் அர்ஜென்டினாவில் குடியேற விரும்புபவர்களுக்காகவும் திட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதான விண்ணப்பதாரருடன் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளையும் சேர்த்துக்கொள்ள கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவு மற்றும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.