அமெரிக்கா–ஈரான் போரில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து சர்ச்சை
அமெரிக்கா–ஈரான் போரில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படுவது மிகவும் சிக்கலானது என அமெரிக்க ஆளும் குடியரசு கட்சியின் மூத்த செனட்டர் லின்ட்சே கிரகாம் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்யும் நாடுகள், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான தூதரக மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ இணைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.

ஆனால், அந்த உடன்படிக்கையில் பாகிஸ்தான் இணையாது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதற்கிடையில், “இஸ்ரேல் மீது பாகிஸ்தான் கொண்டுள்ள நிலைப்பாடு மாற்றமில்லாதது. மேலும், ஈரான் இராணுவ விமானங்கள் பாகிஸ்தானின் விமானப்படை தளங்களில் இருந்ததாக கூறப்படும் தகவல்கள் மத்தியஸ்தத்தின் நடுநிலையை பாதிக்கும்” என லின்ட்சே கிரகாம் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படுவது நடுநிலையாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.