கொரோனா தொற்றாளர்கள் அதிகம்... சிறைச்சாலைக்கு நெருப்பு வைத்த கைதிகள்
தாய்லாந்தில் முக்கிய சிறைச்சாலை ஒன்றில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நிர்வாகம் தவறியதாக கூறி, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலைக்கு தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 400 கைதிகள் குறித்த கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் தெற்கில் கிராபி பகுதியில் அமைந்துள்ள சிறையில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுமாறு கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொத்தமுள்ள 2,100 கைதிகளில் 300 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே சுமார் நூறு கைதிகள் ஒன்று திரண்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கலவரத்தை ஒடுக்க காவலர்கள் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியுள்ளனர். மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 31 பேர்கள் கைது செய்யப்பட்டு, அதிக பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொதுவாக தாய்லாந்து சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படும். இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 87,000 கைதிகளுக்கு தாய்லாந்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 185 கைதிகள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். இதனிடையே, தாய்லாந்து சிறைச்சாலைகளில் தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 280,000 கைதிகளில் 93% பேர்களுக்கு முழுமையாக தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.