மக்களிடையே பரவும் தவறான தகவல்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களிடையே பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தியா, பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தொற்று குறித்து மக்களிடையே தவறான தகவல்கள் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார மையத்தின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப தலைமை அதிகாரி மரியா வான் கெர்கோவ் கூறியதாவது,
“ஒமிக்ரோன் திரிபு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பது தவறான தகவல். கொரோனா பரவல் முடிந்துவிட்டது என்பது தவறான தகவல். ஒமிக்ரான் தான் கடைசி திரிபு என்பது தவறான தகவல், அடுத்தடுத்த திரிபுகள் வரலாம்” என்று கூறியுள்ளார்.
மேலும், கொரோனா குறித்த தவறான எண்ணங்கள், மக்களிடையே நிறைய குழப்பத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்த அவர், இதில் மக்கள் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது என்றும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.