அவுஸ்திரேலிய மக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் தகவல்
அவுஸ்திரேலியாவில் கட்டாய கொரோனா தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முடிவுக்கு வருவதாக அரசாங்கம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் எவரொருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறதோ, அவர் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேம்டும் என்ற விதி அமுலில் உள்ளது. இந்த விதியை அக்டோபர் 14ம் திகதி முதல் நீக்க இருப்பதாக அரசாங்கம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த வேளையில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மக்கள் அரசுக்கு எதிராக முணுமுணுக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது. சீனாவின் ஊஹான் நகருக்கு அடுத்து, கடுமையான கட்டுப்பாடுகள் அமுலில் கொண்டுவந்தது அவுஸ்திரேலியா.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி, பால் கெல்லி தெரிவிக்கையில், கொரோனா தொடர்பிலான நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது என்றார். ஆனால், கொரோனா பெருந்தொற்று இதனால் முடிவுக்கு வந்துள்ளது என பொருள் கொள்ள வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதும் அவுஸ்திரேலியாவில் நாளுக்கும் 5,500 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் மொத்தமாக 15,000 மக்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
உலக அளவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட நாடு அவுஸ்திரேலியா. சுமார் இரண்டாண்டு காலம் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டதுடன், நாட்டுக்குள் பயணப்படுவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.