கனடாவில் போலி முதலீட்டுத் திட்டங்கள்;148 மில்லியன் டொலர் இழப்பு
கனடாவில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் மோசடியான முதலீட்டு திட்டங்களின் மூலம் சுமார் 148 மில்லியன் டாலர்கள் வரையில் மக்கள் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. பெரும்பாலான முதலீட்டு திட்டங்கள் கிரிப்டோ கரன்சியை அடிப்படையாகக் கொண்டவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒன்றாறியோ மாகாண போலீசார் இந்த முதலீட்டு மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பு தொகையை இவ்வாறு மோசடியான திட்டங்களில் முதலீடு செய்து இழந்து விடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெருந்தொகை பணத்தை இழப்பவர்கள் சில சந்தர்ப்பங்களில் தற்கொலை செய்து கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
முறையான அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்வது பொருத்தமானது எனவும் போதிய அளவு ஆராய்ந்து இவ்வாறான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.