உயிரிழந்து விட்டதாக கூறிய சிறுமி இறுதிச் சடங்கில் கண் விழித்தார்; அடுத்து ஏற்பட்ட சோகம்
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுமி காமிலா ரோக்சானா மார்டினேஸ் (Camila Roxana Martinez) கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயிற்று கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
வயிற்று வலி மற்றும் காய்ச்சலுடன் தொடர் வாந்தி அவருக்கு ஏற்பட்ட நிலையில் தனது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதி சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு டிஹைட்ரேஷன் ஏற்பட்டதாகக் கூறி மருத்துவர்கள் மாத்திரைகள் தந்துள்ளனர்.ஆனாலும் குழந்தை உடல் நலன் மேலும் மோசமடைந்த நிலையில், அவர் சுயநினைவு அற்ற நிலைக்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து சில நேரத்தில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ள நிலையில் அடுத்த நாள் குழந்தைக்கான இறுதி சடங்கு நடைபெற்றது.

குழந்தையின் உடலை சவப்பெட்டியில் வைத்து இறுதி சடங்கு நடத்திய நிலையில் குழந்தையின் கண்களில் அசைவுகள் தென்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் அதை கவனித்த நிலையில் குழந்தை இன்னும் சாகவில்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து குழந்தை அவசர அவசரமாக மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிறிது நேரத்திலேயே மருத்துவமனையில் குழந்தை மீண்டும் உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் பெற்றோரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதோடு குழந்தையின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அரசின் அட்டார்னி ஜெனரல் ஜோஸ் லூயிஸ் ருயிஸ் (Jose Luis Ruiz) தெரிவித்துள்ளார்.