டிரம்பை கொலை செய்ய முயன்றதா ஈரான்? அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்வதற்கு ஈரான் திட்டமிட்டள்ளமை தெரியவந்ததாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு தகவல் மூலம் டிரம்ப்பை கொலை செய்வதற்கான ஈரானின் முயற்சி குறித்த விபரங்கள் தெரியவந்ததாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. இதனையடுத்து டிரம்ப் இன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்திற்கும் ஈரானின் திட்டத்திற்கும் தொடர்புமில்லை
எனினும் கடந்த சனிக்கிழமை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கும் ஈரானின் திட்டத்திற்கும் எந்த தொடர்புமில்லை எனவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாதுகாப்பின் மத்தியில் 20வயது தோமஸ் மத்தியு குரூக்கினால் எப்படி டிரம்ப் மீது தாக்குதலை மேற்கொள்ள முடிந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஈரானினால் உருவாகியுள்ள அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க பாதுகாப்பு படையினருக்கும் டிரம்பின் பிரச்சார குழுவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது என அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானினால் எழுந்துள்ள அச்சுறுத்தலை தொடர்ந்து ஜூன் மாதம் டிரம்பிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக பதில் தாக்குதல் பிரிவினர் டிரம்பின் பாதுகாப்பு பிரிவிற்குள் இணைக்கப்பட்டனர், பதில் சினைப்பர் தாக்குதல் பிரிவினரும் சேர்க்கப்பட்துடன் மேலதிக ஆளில்லா விமானங்கள் மோப்பநாய்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை 2000 ம் ஆண்டு ஈராக்கில் ஈரானின் முக்கிய இராணுவதளபதி காசிம் சொலைமானியை கொலை செய்வதற்கான ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதை தொடர்ந்து டிரம்ப் ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.