பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் மரணம்: அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்
இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரிகளைக் கொண்ட 5 பேர் கொண்ட குழு ஒன்றை நியமிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் (17-02-2023) தீர்மானித்துள்ளது.
இந்த உத்தரவை இன்றைய தினம் (17-02-2023) கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய அறிவித்தார்.
இந்த உத்தரவை அறிவித்த மாஜிஸ்திரேட், பிரேத பரிசோதனை அறிக்கையின் அசல் வடிவத்திற்கும் உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான இறுதி விரிவான அறிக்கைக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில் உயிரிழந்தவரின் மரணத்திற்கான காரணத்தை முடிவு செய்வது கடினம் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி உயிரிழந்தவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதாக நீதவான் தெரிவித்தார்.
அதன்படி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்த நீதவான், இலங்கையில் உள்ள முன்னணி சட்ட வைத்திய அதிகாரிகளின் பட்டியலை மூப்பு அடிப்படையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மற்றுமொரு உத்தரவை பிறப்பித்த நீதவான், சட்ட வைத்தியத்தில் நிபுணத்துவம் பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இரண்டு பட்டியலைப் பெற்ற பின்னர், இறந்தவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய தேவையான ஐந்து பேர் கொண்ட குழுவின் பெயரிடப்படும் என்று மாஜிஸ்திரேட் கூறினார்.
இதன்படி, இந்த உத்தரவுகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், முறைப்பாட்டை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, நீதிமன்றில் கோரிக்கை விடுத்து இந்த சம்பவம் தொடர்பான உண்மைகளை முன்வைக்க அனுமதி கோரினார்.
இச்சம்பவம் தொடர்பான சாட்சியங்களை ஏற்கனவே பதிவு செய்து முடித்துவிட்டதாகவும், மரணத்திற்கான காரணம் தொடர்பான உத்தரவுகள் மட்டுமே பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் மாஜிஸ்திரேட் கூறினார்.