நோயாளிகளுக்கு விசம் கொடுத்து கொன்ற மருத்துவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
பிரான்ஸில் நோயாளிகளுக்கு விசம் கொடுத்து கொலை செய்த மருத்துவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பிரான்ஸின் கிழக்கு பகுதியில் உள்ள பேசான்கொன் நகர நீதிமன்றம், இந்த தண்டனையை விதித்துள்ளது.
முன்னாள் மயக்க மருந்து (Anaesthetist) மருத்துவரான பெட்ரிக் பேஷியர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி, அவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பின்படி, பேஷியர் திட்டமிட்டு 30 நோயாளிகளின் இன்ஃப்யூஷன் (IV) திரவப் பைகளில் விஷப் பொருட்களை கலக்கியுள்ளார்.
இதன் விளைவாக 12 பேர் உயிரிழந்ததுடன், பலர் இதயநிறுத்தம் மற்றும் கடுமையான இரத்தப்போக்கு போன்ற அபாய நிலைகளுக்கு உள்ளாகினர். 4 வயது முதல் 89 வயது வரையிலலான நோயாளிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீங்கள் ‘டாக்டர் டெத்’. ஒரு விஷக்காரர், ஒரு கொலையாளி. மருத்துவத் துறைக்கே அவமானம். இந்த மருத்துவமனையை கல்லறையாக மாற்றிவிட்டீர்கள் என அரச தரப்பு சட்டத்தரணிகள் கடுமையாக விமர்சித்தனர்.
கடந்த 2008 முதல் 2017 வரை பேசான்கொன் நகரில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் அவர் பணியாற்றிய காலத்தில், நோயாளிகளை விஷமிட்டதாக குற்றம் சுமத்தி விசாரணை தொடங்கப்பட்டது.