அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் ஊக்கத்தொகை ; டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளில் பணியாற்றிவரும் 14.5 இலட்சம் பேருக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளில் பணியாற்றிவரும் சுமார் 14.5 இலட்சம் பேருக்கு தலா 1776 டொலர்கள் சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா சுதந்திரம் பெற்று ஒரு தேசமாக உருவான ஒரு ஆண்டாக 1776ஐ நினைவு கூறும் வகையில் இந்த தொகை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தரைப்படை, கடற்படை, விமானப்படை, கடலோர காவற்படை மற்றும் விண்வெளி படை என அனைத்து ஆயுதப்படை பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தொடக்கத்தை கௌரவிக்கும் இந்த தொகைக்கு நமது வீரர்களைவிட தகுதியானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்றும் அவர்களே தேசத்தின் உண்மையான ஹீரோக்கள் என்றும் ட்ரம்ப் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கான நிதி ஆதாரமானது அமெரிக்காவின் பொது பட்ஜெட்டிலிருந்து எடுக்கப்படாமல் பிற நாடுகள் மற்றும் வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வர்த்தக வரி மூலம் திரட்டப்பட்ட வருவாயிலிருந்து வழங்கப்படுகிறது.
வர்த்தக போர் மற்றும் புதிய இறக்குமதி கொள்கைகள் மூலம் அரசுக்கு எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் அந்த பலனை நேரடியாக வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.