ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதில் தோல்வி; உண்மையை ஒப்புக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்தத் தவறியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இது தனது நிர்வாகத்தின் போது எதிர்கொண்ட மிகவும் கடினமான மோதல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் புதுப்பிக்கப்பட்ட ரோஸ் கார்டனில் நடைபெற்ற இரவு விருந்தில் பேசிய ட்ரம்ப்,“ஏழு மாதங்களில் நாங்கள் செய்ததை யாரும் செய்ய வில்லை. ஏழு போர்களை நாங்கள் நிறுத்தினோம்.
ஆனால், எளிதானதாக இருக்கும் என்று நான் நினைத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மிகவும் கடினமானது. ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான உறவு காரணமாக அந்த போரை நிறுத்துவது எளிதானதாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.
ஆனால், அது மிகவும் கடினமானதாக முடிந்தது. ஒரு போர் 31 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தது, அது தடுக்க முடியாதது என்று கூறப்பட்டது. நான் அதை சுமார் 2 மணி நேரத்தில் செய்து முடித்தேன். இன்னொன்று 35 ஆண்டுகளாகவும், இன்னொன்று 37 ஆண்டுகளாகவும் நடந்தது. அவற்றையும் முடித்து வைத்தேன்.
நான் சில போர்களை முடித்து வைப்பதற்கு முன்பு, சிலர் அதனை உங்களால் அவற்றைத் தீர்த்து வைக்க முடியாது என்று சொன்னார்கள்.
நான் அவற்றைத் தீர்த்து வைத்தேன். உக்ரைன் - ரஷ்யா போரும் மிகவும் கடினமாக மாறியுள்ளது, ஆனால் நாங்கள் அதைச் சரிசெய்வோம், நாங்கள் அதைத் தீர்த்து வைப்போம்.” என்று தெரிவித்தார்.