இந்தியாவில் எபோலா அச்சம் ; விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
இந்தியாவின் பெங்களூரு நகரில், எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
28 வயதுடைய குறித்த பெண், உடலில் லேசான வலி இருப்பதாக தெரிவித்திருந்தாலும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த பெண் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்ததுடன், அகமதாபாத்திலிருந்து பெங்களூருவிற்கு பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் விமான நிலையங்கள் மற்றும் நுழைவு வாயில்களில் சுகாதார சோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ள எபோலா நோய், இந்தியாவில் இதுவரை எவருக்கும் பதிவாகவில்லை என இந்திய சுகாதார அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், அடுத்த நாளே இந்த சம்பவம் வெளியாகியுள்ளது.
இந்த பெண்ணுக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டால், 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு தெற்காசிய நாடொன்றில் பதிவாகும் முதல் எபோலா நோயாளி இவராக இருப்பார் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியா தனது குடிமக்களிடம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவில் நிலவும் பொது சுகாதாரச் சிக்கல்களை முன்னிட்டு, இந்த வாரம் புதுடெல்லியில் நடைபெறவிருந்த ‘இந்தியா - ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாடு’ ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, உலகளவில் சந்தேகிக்கப்படும் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகளில், 101 பேருக்கு ‘புந்திபுக்யோ’ வகை எபோலா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸ்க்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.