வீட்டுக்கு நெருப்பு வைத்து சொந்த பிள்ளைகளை கொல்ல முயன்ற கனேடிய தாயார்: வெளிவரும் பின்னணி
கனடாவின் எட்மண்டன் பகுதியை சேர்ந்த பெண் ராணுவ வீரர் ஒருவர் தமது மூன்று பிள்ளைகளை கொல்ல முயன்ற வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது மூன்று பிரிவுகளில் கொலை வழக்கும், வீட்டுக்கு நெருப்பு வைத்ததாக கூறி இரண்டு பிரிவுகளில் வழக்கும் பதியப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையும் முடிவுக்கு வந்த நிலையில், மிக விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. குறித்த ராணுவ வீரர் தொடர்பில் அவரது முன்னாள் கணவர் தெரிவிக்கையில், அவர்களின் உறவு எப்போது வேண்டுமானாலும் முறியும் நிலையில் தான் இருந்தது என நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தின் போது, பிள்ளைகள் மூவரும் யாருடன் வாழ வேண்டும் என்ற சட்ட போராட்டம் நடந்து வந்தது எனவும், அப்போது பிள்ளைகள் மூவரும் தாயாருடனே இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பதையும் இவர்களின் 17 வயது மகன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளான். மேலும், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், ஒருக்கட்டத்தில் தாயார் உட்பட நால்வரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தமது பிள்ளைகளை அந்த தாயார் திட்டமிட்டு கொல்ல முயன்றுள்ளதுடன், தாமும் தற்கொலைக்கு முயன்றதாகவே கூறப்படுகிறது. தற்போது வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் எதிர்வரும் மார்ச் 10ம் திகதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
அதுவரையில் அவர் வீட்டுச்சிறையில் இருப்பார் என்றே நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிள்ளைகள் மூவரும் அவர்களின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.