கனடாவில் தமிழ் இனவழிப்பு நினைவுத் தூபியை சேதப்படுத்திய சிறுவன் மீது வழக்குப்பதிவு
கனடாவின் பிராம்ப்டன் நகரில் அமைந்துள்ள சிங்குயாகுசி பூங்காவில் (Chinguacousy Park) உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை அவதூறான வாசகங்கள் மற்றும் வர்ணங்களைப் பூசி சேதப்படுத்திய விவகாரத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 20 திகதி நினைவுத் தூபியில் வர்ணங்கள் பூசப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பதாகப் பீல் பிராந்திய காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இந்தச் செயலைத் திட்டமிட்ட வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட குற்றமாக (Hate Crime) கருதி, விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

தொடர் விசாரணையின் பலனாக, மார்ச் 31 அன்று பிராம்ப்டனைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 5,000 டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாக (Mischief over $5,000) இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் (Youth Criminal Justice Act) கீழ் அச்சிறுவனின் அடையாளத்தை வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்துத் தெரிவிக்கையில்: பொது இடங்களைச் சேதப்படுத்துவதை, குறிப்பாக நமது சமூகங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்கள் மீது வெறுப்புணர்வால் நடத்தப்படும் தாக்குதல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது பீல் பிராந்திய காவல்துறைத் தலைவர் நிஷான் துரையப்பா தெரிவித்துள்ளார்.
இந்தப் பிராந்தியத்தில் வாழும் மக்கள் பொது இடங்களில் பாதுகாப்பாக உணர முழு உரிமை பெற்றுள்ளனர் தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்த வெறுப்புணர்வுக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் இந்த நினைவுத்தூபி 2025 ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. இது திறக்கப்பட்டதிலிருந்து சில முறை சமூக விரோதிகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்களைத் தடுக்கவும், கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்கவும் பீல் காவல்துறை தற்போது ஒரு சிறப்பு 'வெறுப்புணர்வுக் குற்றத் தடுப்புப் பிரிவை' (Hate Crime Unit) வலுப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிகத் தகவல்கள் தெரிந்தவர்கள் 905-453-2121 (ext. 6098) என்ற எண்ணிலோ அல்லது அடையாளம் காட்டாமல் 'Crime Stoppers' மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.