பொம்மைக்கு இறுதி சடங்கு ; குழந்தைகள் மனதில் பதிந்த போரின் கொடுமை
போரின் தாக்கம் காசா சிறுவர்களின் மனநலனை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.
இதற்குச் சான்றாக அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியான காணொளி ஒன்று உலகையே உலுக்கியுள்ளது.
அந்தக் காணொளியில், விளையாடும் வயதில் இருக்கும் சிறுவர்கள், ஒரு பொம்மையைச் உடலமாக உருவகப்படுத்தி அதற்கு இறுதிச்சடங்கு செய்கின்றனர்.

தினசரி தங்கள் கண் முன்னே நடக்கும் மரணங்கள் மற்றும் இறுதி ஊர்வலங்களைக் கண்டு வளர்வதால், சிறுவர்களின் இயல்பான விளையாட்டுகள் இன்று மரணம் மற்றும் துக்கத்தைச் சுற்றியே அமைந்திருப்பதாக மனநல நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
"தங்கள் சூழலில் எதைப் பார்க்கிறார்களோ, அதையே சிறுவர்கள் விளையாட்டாகப் பிரதிபலிக்கிறார்கள். இது அவர்கள் அனுபவிக்கும் மிகக் கடுமையான மன ரீதியான பாதிப்பின் வெளிப்பாடு," என நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒரு காலத்தில் மகிழ்ச்சியுடன் ஓடி விளையாடிய காசாவின் தெருக்கள், இன்று சிறுவர்களின் அமைதியான 'இறுதி ஊர்வல' விளையாட்டுகளால் போரின் கோர முகத்தைச் சாட்சியப்படுத்துகின்றன.
Save the Children உள்ளிட்ட சர்வதேச மனிதநேய அமைப்புகள் இது குறித்துத் தெரிவித்துள்ளதாவது,

காசா சிறுவர்களின் மிகக் கடுமையான மன வேதனையை அனுபவித்து வருகின்றனர். தொடர் போர்ச் சூழலால் அவர்கள் தங்கள் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
மனரீதியான பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான உதவிகள் கிடைக்காத பட்சத்தில், ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2023 ஒக்டோபர் முதல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்ரேல் தாக்குதலில், காசா பகுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70,000-ஐக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.