சூடான் இராணுவத்தினரின் மோதலை முடிவிற்கு கொண்டுவர தீவிர முயற்சி!
சூடான் நாட்டில் இராணுவத்தின் இரண்டு தரப்பினருக்கு இடையே இடம்பெற்று வரும் மோதலை முடிவிற்கு கொண்டு வரும் செயல்பாடுகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பனவற்றினால் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு அமைய யுத்த நிறுத்தத்தினை மேலும் 72 மணித்தியாலத்திற்கு நீடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இருந்த போதிலும் தலைநகர் காட்டோமில் பாரிய மோதல்கள் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னர் முன்னெடுக்கப்பட்ட யுத்த நிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
அதேபோல, சூடானில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்களும் தங்களது நாடுகளுக்கு திரும்புவதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருந்தன.
கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்ற கடுமையான மோதல்கள் காரணமாக இராணுவத்தினர் மட்டுமல்லாமல் பொது மக்கள் உட்பட 512 பேர் பலியானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, 4 ஆயிரத்து 20 பேர் காயமடைந்துள்ளனர்.
எவ்வாறாயினும் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகம் என சூடான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில் தங்களது விடா முயற்சியால் சூடான் மோதல்கள் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.