கனடா சுற்றாடல் திணைக்களம் விடுத்துள்ள பனிப்பொழிவு எச்சரிக்கை
கனடாவில், தெற்கு ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
இந் நிலையில், அந்த பகுதிகளுக்குக் கனடாவின் சுற்றாடல் திணைக்களம் பனிப்பொழிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

10 முதல் 20 சென்றிமீற்றர் வரை பனிப்பொழிவு
பெல்லவில்லே முதல் ஒட்டாவா வரையிலான ஒன்டாரியோவின் பகுதிகளிலும், கட்டினியூ (Gatineau) முதல் பாய்-கோம்யூ (Baie-Comeau) வரையிலான கியூபெக் பகுதிகளிலும் 10 முதல் 20 சென்றிமீற்றர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ஒட்டாவாவுக்குத் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், பனியுடன் பனிக் கட்டிகள் அல்லது உறைபனி மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த பனிப்பொழிவால் வாகன போக்குவரத்து சிரமங்கள் ஏற்படும் என்பதால், மக்கள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதோடு வாகனம் செலுத்தும்போது முன்பக்க விளக்குகளை ஒளிரவிட்டு, வீதியில் முழு கவனம் செலுத்த வேண்டும் என இலக்கை அடையக் கூடுதல் நேரத்தை ஒதுக்குங்கள், மேலும் முன்னால் செல்லும் வாகனத்திற்கும் இடையில் போதுமான இடைவெளியைப் பேணுங்கள் என்றும் ஒன்டாரியோ மாகாண காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.