நடுக்கடலில் பயணிகளுடன் தீப்பற்றிக் கொண்ட கப்பல்; பீதியில் உறைந்த பயணிகள்!
கனடாவின் நோவா ஸ்கோட்டியா மற்றும் வுட் தீவுகளுக்கு இடையிலான கடல் பகுதியில் கப்பலொன்று திடீரென தீப்பற்றிக் கொண்டதனால் பயணிகள் பீதியில் உறைந்து போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
எம்.வீ ஹொலிடே ஐலண்ட் (M/V Holiday Island ) என்ற கப்பல் 180 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது தீப்பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலின் பொறியியல் அறையில் இவ்வாறு தீப்பற்றிக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த போது அலாரம் சத்தம் கேட்டதாகவும், அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தொடர்ச்சியாக பலத்த சத்தத்துடன் அலாரம் அடித்தது எனவும் பின்னர் கப்பல் தீப்பற்றிக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் பணியாளர்கள், பயணிகளை குறிப்பாக சிறுவர்கள் பதற்றமடைவதனை தடுக்க முயற்சித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரையும் உயிர்காப்பு ஆடைகளை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் பாதுகாப்பான முறையில் கப்பலிலிருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கும் பயணிகளை பாதுகாப்பாக மீட்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.