மீனவருக்கு ஆயுள் தடை விதித்த கனேடிய மாகாண நீதிமன்றம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீனவர் ஒருவருக்கு ஆயுள் தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Nanaimo பகுதியை சேர்ந்த Scott Stanley Matthew Steer என்ற மீனவருக்கே ஆயுள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பசிபிக் பிராத்தியத்தை சேர்ந்த ஒரு மீனவருக்கு ஆயுள் தடை விதிப்பது என்பது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இதுவே முதல்முறை என தெரியவந்துள்ளது.
கடந்த 2020 மார்ச் மாதம் 2ம் திகதி நள்ளிரவுக்கு பிறகு, வான்கூவர் துறைமுகத்தில் ஸ்டீர் சட்டவிரோதமாக நண்டு மீன்பிடித்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். நீதிமன்ற ஆவணங்களின்படி, கடல் ரோந்து படையினரால் ஸ்டீர் தடுத்து நிறுத்தப்பட்டார் எனவும், தனது படகில் அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றுவிட்டார் எனவும் தெரியவந்துள்ளது.
ஆனால் தொடர்ந்து சென்ற ரோந்து அதிகாரிகள் போராட்டத்திற்கு பிறகு அவரை கைது செய்துள்ளனர். அவரது படகில் இரு சக மீனவர்களும் இருந்துள்ளனர். படகு மற்றும் பொருட்களை கைப்பற்றிய அதிகாரிகள், அவரது படகில் கண்டெடுக்கப்பட்ட 250 உயிருள்ள நண்டுகளை மீட்டு மீண்டும் கடலில் விட்டுவிட்டனர்.
இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொண்ட ஸ்டீர் ஆயுள் தடை பெற்றுள்ளதுடன், அவர் இனி மீன் பிடி படகுகளை வாங்கவோ அல்லது விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 75 மணி நேரம் சமூக பணியில் ஈடுபட வேண்டும். மட்டுமின்றி மீன்பிடி படகில் அவர் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 6 மாத காலம் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவை பொறுத்தமட்டில் நண்டுக்கு மட்டும் வாங்கவும் விற்கவும் சிறப்பு உரிமம் வழங்கப்படுகிறது.
மட்டுமின்றி, உண்ணத்தகுந்ததா என்பது சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2008ல் இருந்தே மீன்பிடி தொடர்பான 15 வழக்குகளில் ஸ்டீர் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.